Monday, January 30, 2012

யாழ் மருத்துவர்களின் அரும்பணியில் காசநோய் தடுப்பு பற்றிய நூல்

காசநோய் உலகெங்கும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.
கொழும்பு மாவட்டதிலிருந்து மாத்திரம் வருடாவருடம் 2000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருடாவருடம் 10,000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலும் குறைவில்லை.



போரில் குண்டுத்தாக்குதல்கள் ஏராளமாக நடந்த காரணத்தால் அந்த விசக் காற்றுகளினால் பல விதமான சுவாச நோய்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக வன்னி மக்கள் மோசமாக ஆட்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

இந் நிலையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் யாழ் சுகாதாரப் பகுதியின் காசநோய் ஒழிப்புப் பிரிவு மருத்துவ அதிகாரியான டொக்டர் சி.யமுனானந்தா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் எழுதிய நூல்தான் மேற் கூறிய ‘காசநோய் சமூக அணுகுதல்’ என்பதாகும். மிகவும் எளிமையான தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் நூலை எழுதியுள்ளார்

உள்ளடக்கம் பின்வருமாறு
  1. காசநோயும் சுவாச ஆரோக்கியமும்
  2. நுரையீரலில் ஏற்படும் காசநோய்
  3. நுரையீரல் அல்லாத பகுதிகளில் ஏற்படும் காசநோய்
  4. சிறுவர்களில் காசநோய்
  5. பெண்களில் காசநோய்
  6. காசநோயும் சலரோகமும்
  7. காசநோயும் புகைத்தலும்
  8. காசநோயும்மதுபானமும்
  9. காசநோயும்போசாக்கும்
  10. காசநோயும்எயிட்ஸ் நோயும்
  11. முதியவர்களில் காசநோய்
  12. மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்
  13. காசநோயை ஆய்வுகூடங்களில் கண்டறிதல்
  14. ஆய்வுகூடங்களில்தரம் பேணுதலும் கட்டுப்பாடும்
  15. காசநோயிற்கான சிகிச்சை
  16. தொய்வுநோயினை காசநோயிலிருந்து வேறுபடுத்தி அறிதல்
  17. காசநோய் பற்றிய விழிப்பணர்வு
காசநோய் பற்றிய விழிப்புணர்வுப் பாடல்கள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளமை சமூகத்திற்குள் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்ல வழிவகுக்கிறது.
காசநோய் என்றால். அதன் அறிகுறிகள் என்ன? என்பதை சுலபமாக விளங்கக் கூடிய படங்களாகக் கொடுத்துள்ளார்.


இவை தவிர வேறு சில அறிகுறிகளும் அடங்கும். அவை பற்றிய கருத்துப்படங்களைக் கீழே காணலாம்.


இதைவிடத் தெளிவாக காசநோயின் முக்கிய அறிகுறிகள் பற்றி விளக்க முடியாது. எவருக்கும் புரியும் வண்ணம் கருத்துப் படங்கள் அமைந்துள்ளன.



இந்த நூல் ஏற்கனவே இரண்டு பதிப்புகள் வந்து மக்களிடையே பேராதரவைப் பெற்றுள்ளது.

மக்களிடையே சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதில் யாழ் மருத்துவர்கள் என்றுமே முன்னணியில் நிற்கிறார்கள்.

போரின் கொடும் தாக்கம் நிறைந்த நாட்களில் டொக்டர்.பொன்னம்பலம், டொக்டர்.திருமதி.நாகேந்திரா, டொக்டர்.சிவகுமார், டொக்டர்.தயா சோமசுந்தரம், டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவயோகன், டொக்டர்.குகதாசன், டொக்டர்.ரவிராஜ் போன்ற பலரும் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவர்களுக்கு எமது சமூகம் என்றும் மதிப்புக் கொடுத்து வந்திருப்பதையும் அறிவோம்.

இன்று கொழும்பில் பணியாற்றும் நூற்றுக் கணக்கான மருத்துவ நிபுணர்களிடையே மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து பரிவோடு பணியாற்றுபவர்களாக டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவகுமார்,  போன்ற ஒரு சிலரையே குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் முன்பு யாழ் மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் அவ்வாறான பல மருத்துவர்கள் யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவர்களது பெயர் விபரங்களை நான் அறியேன். புற்று நோய், காசநோய், பொது மருத்துவம், மனநலம், சத்திர சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மகப்பேறு போன்ற பல துறைகளிலும் அளப்பரிய பணியாற்றுகிறார்கள். குறைந்த வசதிகளுடன் நிறைான பணியாற்றுகிறார்கள்.

தங்கள் வழமையான பணிகளுக்க மேலாக அவர்கள் காசநோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நோய்கள் பற்றிய நூல்களையும். சிடி க்களையும் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.

அவர்களது பணிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்க வேண்டியது எமது கடமையாகும். பாராட்டிற்குரிய பெருமனிதர்களாக இன்றும் யாழ் மருத்துவர்களே விளங்குகிறார்கள்.

ஞாயிறு தினக்குரலின் நூலகம் பகுதியில் 29.11.2012 ல் வெளியான எனதுகட்டுரை.

Post Comment

4 comments:

Kumaran said...

என் இனிய காலை வணக்கங்கள்.
நல்ல செயல்..இந்த பதிவு பலருக்கு போய் சேரட்டும்.
நீங்கள் கொடுத்த சில படங்களையும் பார்த்தேன்..சிறப்பாக உள்ளது.நல்ல பதிவு.நன்றி.

Muruganandan M.K. said...

நன்றி Kumaran. ஓசைப்படாமல் பல அரிய பல பணிகளை அங்கு செய்கிறார்கள்.

Sowmi said...

www.sowmi-kattradhutamil.blogspot.com
இந்த சிறுவனை பற்றி உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன் அய்யா. முடிந்தால் படியுங்கள்.

Muruganandan M.K. said...

Sowmi கேட்டால் கொடுத்த பூமி என்ற உங்கள் கவிதையில்.....
"நியாயத்தராசில் காலியாய் இருதட்டும் ,
அநியாய எடைக்கற்கள் அதன் மீது கரை முட்டும்,.."
சிறப்பான வரிகள்.
வாழ்த்துகிறேன்.

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.