Wednesday, November 30, 2011

இலட்சிய இளைய சமூதாயம் நோக்கிய இளைஞனின் புனைவுகள் 'மீண்டும் துளிர்ப்போம்'

பரணீதரனின் சிறுகதைத் தொகுதியை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய அழகான நூல். இதழ் விரித்து நிற்கும் மலரொன்று அழகிய அட்டைப்படமாக சிலிர்த்து நிற்கியது. வடிவமைத்த மேமன் கவியின் கவிநயம் துலங்குகிறது.


தொகுப்பிலுள்ள 'யதார்த்தம'; என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. இதற்குக் காரணம் அதிலுள்ள சமூகப் பெறுமானம்தான். எமது சமூகத்தில் முதுமை வாழ்வு பற்றி இன்னும் தளாராமல் இருக்கும் ஒரு கருத்தை இக்கதை மறுபரிசீலனை செய்கிறது. நோகாமல் தவறெனச் சுட்டிக் காட்டுகிறது. இது என்னுள் பல சிந்தனை ஊற்றுக்களை திறந்து விட்டது. அதனைப் பகிர்ந்து கொள்வதுடன் நூலில் உங்களையும் அழைத்துச் செல்லலாம் என எண்ணுகிறேன்.

தனது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் வரை முதுமை வாழ்வு என்பது துன்பமானது அல்ல. சொந்தக் கால் என்பது பொருளாதார ரீதியானதைக் குறிக்கவில்லை. நடமாடித் திரிந்து தனது சொந்த அலுவல்களை தானே செய்யக் கூடியதாக இருக்கும் வரை அது தொல்லை கொடுப்பதாக இருக்கமாட்டாது.

வயதிற்கு மதிப்பிருக்கிறது இங்கு. வயது முதிர்ந்தவர்களைக் கௌரவிக்கும், அவர்களது அனுபவபூர்வமான ஆலோசனைககளுக்கு காது கொடுக்கும் சமூகப் பாரம்பரியமும் எம்முடையது. அத்தகைய பண்பாட்டுச் சூழல் இன்னமும் ஒழிந்து விடவில்லை. அதன் காரணமாகவே முதுமை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது எனக் கூறினேன்.

ஆனால் படுக்கையில் வீழ்ந்துவிட்டால்....? அறளை பெயர்ந்து விட்டால் என்ன நடக்கும்?

வயது முதிர்ந்த நேரத்தில் அதிலும் முக்கியமாக நோயும் இயலாமையும் துன்புறுத்தும்போது தமது தாய் தகப்பனை அல்லது பாட்டன் பாட்டியை தமது வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டியது தமது கடமை என்பதாகவே இன்னமும் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முற்றிலும் தொலைந்து விடாத சமூகமாக இருப்பதன் பலன் அது.
ஆனால் படுக்கையில் வீழ்ந்து விட்டபின் ஒரு புதிய பிரச்சனை தலை தூக்குகிறது. ஆழமான அன்பு, பொருளாதார வசதி ஆகியன இருந்தாலும் இப்பிரச்சனையை எதிர்கொள்வது சிரமம்.

மலையகத்தைக் களமாகக் கொண்ட கதை. மண்வாசனைக் கதையல்ல.
கைக் குழந்தையாக இவன் இருந்தபோதே மலைச்சரிவு இவனது தந்தையைக் காவு கொண்டுவிட்டது. அதன் பின்னர் இவனைப் பிள்ளை மடுவத்தில் விட்டு விட்டு, கொழுந்து பறித்து அவனை வளர்தெடுத்தது அந்த அன்னைதான். பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்து ஆசிரியன் ஆக்குகிறாள். தான் உழைக்கத் தொடங்கியதும் தாயை வேலை செய்வதை நிறுத்தி வீட்டில் ஆறுதலாக இருக்கச் செய்கிறான். தாய் பேரக் குழந்தைகளைப் பராமரிப்பதில் மகிழ்ச்சியடைகிறாள். பாசம் நிறைந்த குடும்பம்.

இந்நிலையில் திடீரெனப் பக்கவாதம் வந்து படுக்கையில் தாயை விழுத்திவிடுகிறது. எவ்வளவுதான் தான் பாசம் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருப்பதால் தாயைப் பராமரிப்பது பெரும் சுமையாகிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்ய முடியும். முதியோர் இல்லத்தில் விடுவதுதான் வழி. ஆனால் தாய் மீதான பாசம், பாரமரிப்பு நிலையில் விடுவது பற்றிய குற்ற உணர்வு, ஊர்ப்பழி, போன்ற குடும்ப ரீதியானதும் சமூக ரீதியானதும் காரணங்கள் தடையாக இருக்கின்றன.

இவை பற்றி அலசும் சமூக விழிப்புணர்வுக் கதையாக இருக்கிறது. மகன் சரியாக முடிவெடுக்கிறான். பாராட்டத்தக்கது. ஆனாலும் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. தாயின் இயற்கை மரணத்தில் முடிப்பதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஆனால் பரணீதரன் ஏனைய படைப்புகள் பலவும் இதற்கு மாறாக தீர்க்கமாக கருத்துக்களைத் முன் வைக்கிறன. சமூக முன்னேற்றதில் அக்கறையுள்ள படைப்பாளியால்தான் தெளிவான கருத்துக்களை முன்வைக்க முடியும். அழகியலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டு பேடித்தனமான படைப்புகளை வழங்கும் சிறுமை இவரிடம் காணப்படவில்லை.

கருத்து ரீதியாக 'யதார்த்தம்' என்னைக் கவர்ந்த கதையாக இருந்தபோதும் நூலின் முகப்புச் சிறுகதையான 'உயிரினும் மேலானது' நல்லதொரு படைப்பு எனலாம். இக்கதையில் படைப்பாளியின் ஆளுமை சிறப்பாக வெளிப்படுகிறது. காதல், போரின் அவலம், விடுதலைப் போராட்டதின் மறுபக்கம், அதிகாரிகளின் சுயநலம் என எமது நிகழ்கால வாழ்வின் பல பக்கங்களைத் தொட்டு சுவார்ஸயமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிர்வு தருவதாக இருப்பது சதீயத்திற்கும் குடும்ப கௌரத்திற்கு எதிராக மனிதாபிமானத்தின பக்கம் நிற்கும் இளைஞனின் உறுதிதான்.

பாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை 'விடுதலையாகி நிற்பாய்' பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது.

'எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ'

இது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறானக் எண்ணக் கருக் கொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது.
உளவியில் கல்வியறிவு கொண்ட இவரையொத்த இளம் படைப்பாளிகள் தமது எழுத்தாண்மையால் அதை மாற்ற வேண்டிய கடமை உள்ளது.

இத்தொகுதியில் உளவியிலை நேரடியாகப் பேசும் குறைந்து மூன்று கதைகளாவது இருப்பதானது பரணீதரன் செய்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது. 'மாறுதல்;, 'பகிடி வதை', 'விடுதலையாகி நிற்பாய்' என்பன அவை.

இன்றைய இளைய சமூதாயத்தின் போக்கில் விரக்தியுற்றவர்களாக பல பழைய தலைமுறையினர் இருக்கிறார்கள். சிந்தனைகளிலுள்ள வேறுபாடுகளுக்கு தலைமுறை இடைவெளிதான் காரணம். இதனால் மனதில் தாக்கம் ஏற்பட்டு விரக்தியடையும் ஓரு முதியவரை 'மாறுதல்' சிறுகதையில் காண்கிறோம். தனது வீட்டிலேயே தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் அவரை நிலை குலைய வைக்கிறது. உள ஆற்றுப்படுத்தலை (கவுன்சிலிங் ) நாடி வருகிறார்.

'உங்கடை நண்பர்கள் ஆறு ஏழு பேர் வீட்டைபோய் அவர்களோடை, பிள்ளைகளோடை கதைச்சுப் போட்டு நாளைக்கு வாங்கோ... தொடர்ந்து கதைப்போம்.' 

பிரச்சனையை விளக்கி ஆறுதல் கொடுக்கும் கவுன்சிலிங் செய்வதற்குப் பதிலாக இந்த விடை கிடைக்கிறது. ஆனால் உண்மையான கவுன்சிலிங் இதுதான். தானே மற்றவர் அனுபவங்களுடன்  கலந்துணர்ந்து சமூகத்திலிருந்தே கற்றுக் கொள்ள வழிசெய்கிறது. கதையோடு கதையாக உள ஆற்றுப்படுத்தல் பற்றிய பல விபரங்கள் வாசகனுக்குச் சொல்லப்படுவது இக்கதையை மேலும் முக்கியப்படுத்துகிறது.

'விடுதலையாகி நிற்பாய்' சிறுகதையில் பிறழ்வு நடத்தையின் அறிகுறிகள் பட்டியலிடுவது போலச் சொல்லப்பட்டதற்குப் பதிலாக சம்பவங்களின் ஊடாக நகர்த்தியிருந்தால் வாசகனிடத்தில் கூடியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. நூலாசிரியரின் வேறு பல படைப்புகளையும் சேர்த்து நோக்கும்போது, ஆசிரியர் கூற்றாக நேரடியாக கதையைச் சொல்லிச் செல்லும் பண்பு இவரிடத்தில் அதிகம் இருப்பதாக என் மனதில் பட்டது. இது தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிப்பதற்கு அவசியமான போதும் ரசனையான வாசிப்பிற்கு துணைபுரியும் எனத் தோன்றவில்லை.

ஆயினும் கட்டுடைத்துப் புதிய இலக்கிய வடிவங்களை தேடிப் பயணிக்கும் இன்றைய இலக்கியச் சூழலில் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற வழமையான வடிவங்களை மீறியும், ஒன்றுக்குள் ஒன்று சங்கமிப்பதுமான மாறுபட்ட வடிவங்கள் ஏற்புடையனவே.

இவரது படைப்புகளில் காணும் மற்றொரு பண்பு வாழ்வில் பற்றுதலை ஊட்டுவதாகும்.
  • சலிப்பு, எதிர்காலம் மீதான நம்பிக்கை வரட்சி ஆகியவற்றை விடுத்து 
  • நல்மனத்தோடு விடாமுயற்சி செய்து முன்னேறும் பாத்திரங்களைப் பல படைப்புகளில் காண்கிறோம். 
  • தகப்பனை அல்லது தாயை இழந்த மகன், மகள் குடும்பத்திற்காக உழைத்து, முன்னேற்றுவதான குறிக்கோளுடன் இயங்குகிறார்கள். 
  • குடி, புகைத்தல், பகிடிவதை போன்றவற்றிலிருந்து தப்பித்த 
  • இலட்சிய வாழ்வுப் பாத்திரங்கள் சமூக விடிவிற்கான உதாரணங்களாக நிற்கிறார்கள். 

பொதுவாக இலட்சிய இளைய சமூதாயம் நோக்கிய இளைஞனின் புனைவுகளாக இருக்கின்றன.

  • தெணியானின் 'உளவியல் பார்வை இழையோடும் படைப்புகள்' என்ற விரிவான அணிந்துரையும்,  
  • பேராசிரியர். சபா.ஜெயராசாவின் நுணுக்கமான 'முன்வாயில்' ம் நூலுக்கு அணி செய்கின்றன. 
  • பின் அட்டையில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பரணீதரனை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.


சஞ்சிகை வெளியீட்டில் தனது தனித்துவத்தைப் பதித்த ஜீவநதி சஞ்சிகையின் மற்றொரு வளர்ச்சியான ஜீவநதி வெளியீடு வந்துள்ளது. இரண்டிலும் தனது தகமையை வெளிக் கொணர்ந்த பரணீதரனைப் பாராட்டுகிறேன்.

ஞானம் சஞ்சிகையில் வெளியான எனது விமர்சனக் கட்டுரை.
எம்.கே.முருகானந்தன்.


0.0.0.0.0.0

Post Comment

1 comments:

♔ம.தி.சுதா♔ said...

ஐயா விமர்சனத்தை ரசித்தேனையா...

அடுத்த முறை நூலகம் செல்லும் போது இந்நூலை பெற முயற்சிக்கிறேன்...

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.