
வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்துவிட்டு
போரின் சகதிக்குள் சிக்கி
உயிர் மூச்சுக்காய்த் திணறிக் கொண்டிருக்கும் பேதைகளானோம்.
எத்தனை கனவுகள் எங்கள் இளமைக் காலத்திலே.
மொட்டுக்களாக அரும்பி விரியாமலே கருகிவிட்டன.
கனவுகளையும் தொலைத்த அபாக்கியவான்கள் நாம்.
சாதி சமய பேதமற்ற, ஆண்டான் அடிமை நிலை மறைந்த,
அடக்குமுறை ஒழிந்த,
சமத்துவம் எங்கெணும் நிலைத்த தேசம் எமக்குக் கிட்டுமென….
எமது சொந்தக் குரலில்
சுந்தரத் தாய் மொழியில்
தீவு எங்கெணும் கூவித் திரியும் சுதந்திரம் கைகூடுமென …
இப்படி இப்படி எத்தனையோ கனவுகள் கற்பனைகள்.
சுதந்திர மனிதர்களாய் பிறந்து வாழ்வின் வசந்தங்களை ஓரளவு அனுபவித்த பின் மேலும் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி வளர்த்தோம்.
அவை கானல் நீர்தானோ என இன்று மயங்கி நிற்கும் மூத்த தலைமுறையினர் நாம்.
போருக்குள் பிறந்து அவற்றின் அவலங்ளை அனுபவித்து, இவற்றிலிருந்து மீண்டே தீரவேண்டுமெனத் திடமும், அவாவும் உறுதியும் கொண்டவர்கள் அடுத்த தலைமுறையினர். அது முடியாதபோது தப்பினால் போதுமெனப் பறந்து சென்று, அங்கும் சுதந்திரக் கனவுகளை விதைத்து கீதம் இசைப்பவர்கள் அவர்கள்.
வாழ்ந்தாலும் மாண்டாலும் சொந்த மண்ணில்தான் என உறுதியாக இருப்பவர்கள் மீதி.
அடிமைத்தனத்துள் பிறந்து, அதனூடே வளர்ந்து அதுவே நிசமான வாழ்வென மயங்கி அதற்குள்ளும் சின்னச்சின்ன சந்தோஷங்களை நாடும் இன்னுமொரு தலைமுறையும் உருவாகிறதா?
நினைப்பதற்கே சங்கடமாக இருந்தபோதும் அதுதான் உண்மையா?
சிறுதெய்வ வழிபாடுகளுடனும், வீரசைவ உணர்வுகளுடனும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் தமிழ் இனம் பிராமண ஆதிக்கம் கொண்ட வைதீக சமூகமாக சிறிது சிறிதாக மாறி, இன்று அதுவே நிஜம்போலாகி சமஸ்கிருத மந்திரங்களுக்குள் கிறங்கி நிற்கவில்லையா?
அது போல…
போரின் இழப்புகளும், பொருளாதார சுமைகளும் அழுத்தும்போது மட்டைப் பந்தாட்டத்தின் போதையில் தனது மக்களை மூழ்க வைத்தாள் ஒரு தேசத்தின் தலைவி. இன்று எமது இளசுகளும் பந்தாட்டங்களிலும், களியாட்டங்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் தம் நிலை மறக்கும் மாற்றம் ஏற்படுகிறதா?
இது சரியானதா பிழையானதா என்பதல்ல கேள்வி. தன் மகிழ்வை, நிறைவை நாட எவனுக்கும் உரிமை உள்ளதுதானே? மாறாக அது தவறான பாதை என எண்ணுபவர்களின் ஏக்கமும் தவறில்லையே?
‘இன்னொரு புதிய கோணம்’ என்ற தெணியானின் புதிய நூலைப் படித்தபோது எனது மனம் நிலை கொள்ளவில்லை. சிறகுகள் ஒடிந்து கூட்டுக்குள் அடங்கிவிட்ட பறவையின் துயரக் கனவுகள் போலான சிந்தனைகளில் மூழ்கியது. அதிலும் முக்கியமாக ‘பாதுகாப்பு’ என்ற சிறுகதை என் கவனத்தை ஈர்த்தது. ஜீவநதி ஆடி ஆவணி 2007ல் வெளியானது. நூலிலுள்ள மிக அண்மையில் எழுதப்பட்ட இளமையான படைப்பு இது எனலாம்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரும் இன்றைக்குமான வாழ்வின் கோலங்களை மிக அழகாகச் சொல்கிறது. அன்றைய வாழ்வு இனிமையானது. அவசரங்கள் அற்றது. இயற்கையோடு ஒன்றியது. தகப்பனானவர் கண்டிப்பானவர். அவர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. ஆனால் பாசம் மிக்கவர். தனது குழந்தைகளின் பாதுகாப்பு தன்னிடமே என்பதைக் கேள்விக்கு உட்படுத்தாதவர். படம் பார்க்க வேண்டும் என்றால் கூட நண்பர்களுடன் செல்ல அனுமதிக்காது தானே கூட்டிச் செல்பவர்.
‘ஐயா தனது சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்துப் போகிறார்’ என்ற வசனத்தோடு இச் சிறுகதையின் முதற்பகுதி நிறைவுறுகிறது.
இரண்டாம் பகுதியில் தகப்பன் யாழ்ப்பாணம் செல்லப் புறப்பட்டு ஆயத்தமாக நிற்கிறார். யாழ் பயணம் முன்பெல்லாம் இரண்டு மணித்தியாலயத்தில் போய்வர கூடியது. இப்பொழுது இரண்டு மணித்தியாலம் போதாது என்ற தகவலானது பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த காலம் இது என்பதைக் கோடி காட்டுகிறது.
மகனைத் தேடினால் அவன் விளையாடப் போய்விட்டான். இன்று லீவு என்பதால் வழமை போல விடியற்காலை எழும்பாது, ஆறுதலாக எழுந்தவனுக்கு இன்று சுதந்திரமாக இருக்கக் கிடைத்த மகிழ்ச்சி. தாய் கூட்டி வருகிறார். வாசலில் மோட்டர் சைக்கிள் நின்றதைக் கண்டு, தன்னையும் தகப்பன் கூட்டிக் கொண்டு போகப் போறார் என்பதைப் புரிந்து, மாட்டன் மாட்டன் என அடம் பிடிக்கிறான்.
‘அப்பா போற இடமெல்லாம் என்னை கூட்டிக் கொண்டு திரியிறார். என்னை விளையாட விடுங்கோ’ என்பது அவனது கோரிக்கையாக இருக்கிறது.
அத்துடன் கதை முடிந்து விட்டதாகவே எனக்குப்பட்டது. ‘நான் மோட்டார் சைக்கிளில் மகனோடு புறப்பட்டுப் போகிறேன்.’ என்ற இறுதி வசனம் அதை உறுதிப்படுத்தியது.
ஆம் இன்றைய யாழ் நிலவரம் அப்படி! முன்பு பிள்ளைக்கு தகப்பன் பாதுகாப்பு கொடுப்பான். இன்று இளவயதுள்ளவன் வெளியே செல்லும் போது அதுவும் முக்கியமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது குழந்தை கூட வருவதுதான் தகப்பனுக்கு பாதுகாப்பு. இச் செய்தியை இச்சிறுகதை மிக நாசூக்காகச் சொல்கிறது.
சிறுகதை என்பது யாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வது அல்ல. பூடகமும் வேண்டும். இதை தெணியான் மிக நேர்த்தியாக கலை நயத்துடன் சொல்லியிருந்தார். இன்றைய கால கட்டத்தில் இதைவிட வெளிப்படையாகப் பேசுவது ஆபத்து என்பதையும் உணர்ந்தேன்.
ஆனால் இதற்கு மேலும் ஏதோ ஒன்றை நான் தப்பவிட்டுவிட்டேன் என்ற உணர்வு என்னைத் தொல்லைப் படுத்தவே அதனை மீண்டும் வாசித்தேன்.
மாட்டன் மாட்டன் என அடம் பிடித்தவனை எதைக் கொடுத்து தகப்பன் தாஜா பண்ணினான். கேக் வேண்டாமாம், கஜீ வேண்டாமாம், முந்திரி அப்பிளும் வேண்டாமாம்.
அப்ப என்ன வேணுமாம்?
முன்பு புலோலியூர் இரத்தினவேலோன் தொண்ணூறுகளில் எழுதிய ‘புதிய பயணம்’ சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. கொழும்பில் இருந்து வந்த மாமன், குழந்தையான மருமகனுக்கு விளையாட என்ன வாங்கித் தர என்று கேட்ட போது, தனக்கு ஏ கே 47 வாங்கித் தாங்கோ என்றான் சிறுவன். அவன் சொன்னதைக் கேட்ட போது மாமன் திடுக்கிட்டான். ஆனால் நாம் திடுக்கிடவில்லை. காலம் அப்படி, சூழல் அப்படி. அவ்வாறுதான் அந்தக் குழந்தையால் கேட்க முடியும். அக்காலகட்டத்தில் சிறுவர்களின் உணர்வை இரத்தினவேலோன் அற்புதமாக பதிவு செய்திருந்தார்.
ஆனால் இந்தக் குழந்தை கிரிக்கட் போளும் பற்றும் வாங்கித் தாறன் என்ற போது, இணக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டது.
‘ரிவீ யில் அவன் கிரிக்கட் விரும்பிப் பார்ப்பதும் ….. நான்தான் ஜெயசூரியா, நான்தான் ஜெயவர்த்தனா ..’ எனவும் சொல்வது மீள் வாசிப்பில் மனத்தில் பட்டது. ஆம் இந்த விடயம்தான் என்னை உலுப்பியது. இக் குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டார்களா? இவர்கள் எண்ணங்கள் அபிலாசைகள் எதிர்பாரப்புகள் எல்லாம் புதிய திசைகள் நோக்கிப் பயணப்படப் போகின்றதா.
உண்மையில் தெணியான் இதைத்தான் சொல்லவந்தாரா? அல்லது இது எனது கற்பனையா? புரியவில்லை. எப்படியிருந்தபோதும் புதிய கற்பனைகளையும் சிந்தனைகளையும் தூண்டிவிடுவதுதானே நல்ல சிறுகதையின் சிறப்பம்சம். நீங்களும் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தை எனக்கும் சொல்லுங்கள்.
இந்த நூலின் கடைசிக் கதையாக அமைவது ‘பிஞ்சுப்பழம்’. இதுவே இத்தொகுதியின் மூத்த கதையும் ஆகும். அதாவது 1971 பெப்ரவரி மல்லிகை இதழில் வெளியாகியுள்ளது. தெணியானின் ஆரம்ப காலப் படைப்பாக இருந்தபோதும் கவனத்தில் கொள்ள வேண்டிய படைப்பாக உள்ளது.
படிப்பில் கெட்டித்தனம் உள்ள ஒருவன் குடும்பச் சூழ்நிலை காரணமாக நெல்லியடிச் சந்தைக்கு வானில் ஏற்றிக் கொண்டு வரப்படும் வாலைக் குலைகளை இறக்கிச் சந்தைக்குக் கொண்டு போகும் கூலித் தொழிலுக்கு போவதும், அங்குள்ள சூழலுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் இயைபடைவதும், அதிலிருந்து வெளியேறி மீண்டும் படிப்பதற்கான புறச் சூழல் கிட்டியபோதும், அதில் மனம் ஒன்றாமல் மீண்டும் தொழிலுக்கு திரும்புவதுமான கதை.
நெல்லியடிச் சந்தைச் சூழல், அவ்விடத்து நாளாந்த நடப்புகள், வறுமையும் அறியாமையும் குடிகொண்டிருந்த குடும்பத்தில் படிப்பை விட கூலித்தொழிலில் சொற்ப பணம் உழைத்தபோது கிடைக்கும் மதிப்பு, விடலைப் பயல்களின் பேச்சுவழக்கு, நடைமுறை போன்றவை மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோஷங்களை முன்வைக்கும் வரட்டுத்தனமான படைப்புகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தெணியான் இத்தகைய கலைத்துவமான சிறுகதையைப் படைத்தமை மகிழ்வழிக்கிறது. பாடசாலை ஆசிரியராக வருபவரின் சிந்தனையாக எழும் சில கருத்துக்களைத் தவிர நேரடியாகப் போதனை செய்யாமல் படைப்பின் ஊடாக சிந்தனையைத் தூண்டிவிடும் நல்ல கதை.
ஆயினும் இது தெணியானின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே பேசப்பட்ட ‘பாதுகாப்பு’இ ‘பிஞ்சுப்பழம்’, ஆகியவற்றைத் தவிர ‘தீண்டத்தகாதவன்’ போன்ற படைப்புகள் என்னைக் கவர்ந்தன. ‘தீராவிலை’ என்ற பெண்ணியக் கருத்தை வெளிப்படுத்தும் சிறுகதையும் கவனிப்புக்குரியது.
வேறு சில படைப்புகளை தொகுப்பில் சேர்க்காமல் தவிர்ந்திருந்தால் நூலின் தரம் பேணப்பட்டிருக்கும் என எண்ணிய போதும், தனது படைப்புகள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசிரியரின் ஆதங்கத்தை அவரது முன்னுரையில் உணரக் கூடியதாக இருந்தது.
எட்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிடப் போதுமான படைப்புகள் இருந்தபோதும், இதையும் உள்ளடக்கி மூன்று சிறுகதைத் தொகுதிகளே வந்துள்ளன என்ற செய்தி கவலையளிப்பதாக இருக்கிறது. ஆயினும் விடிவை நோக்கி, கழுகுகள், பொற்சிறையில் வாழும் புனிதர்கள், மரக்கொக்கு, காத்திருப்பு, கானவில் மான் ஆகிய நால்களும் சிதைவுகள் குறுநாவல் தொகுதியும் ஏற்கனவே வெளிவந்து சாஹித்திய பரிசு உட்பட பல பரிசுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவரது மேலும் சில நூல்கள் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
வெளியீட்டுரையை இந்நூலை வெளியிட்ட பூமகள் சனசமூக நிலையத்தின தலைவர் இ.செல்வராசா தந்திருக்கிறார். அணிந்துரை தவிர்க்கப்பட்டுள்ளமையானது தெணியானுக்கு தனது படைப்புகள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பிரபலங்களுக்கு பின் ஓடாத அவரின் தன்னம்பிக்கை பாராட்டவும் மதிக்கப்பட வேண்டியதாகும்.
அட்டைப்படம் ரமணியுடையது. ‘இன்னொரு புதிய கோணம்’ என்ற சிறுகதையின் சில கோணங்கள் பின்புலமாக அமைய தெணியானுடைய முகம் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. ரமணியின் கைவண்ணத்தை காண்பதென்பது எப்பொழுதுமே மகிழ்வூட்டுவதே
ஒவ்வொரு சிறுகதையின் ஆரம்பத்தையும் சிறு ஓவியங்கள் அலங்கரிக்கன்றன. கதையின் கருவை வெளிப்படுத்தும் எளிமையான ஓவியங்களை வரைந்த க.மகேஸ்வரன் பாராட்டுக்குரியவர்.
இத்தொகுப்பின் முக்கியத்துவம் என்ன? தெணியானின் படைப்புலகின் தடத்தை 70, 80, 90, 2000 ஆண்டுகளில் என ஒரே நூலில் ஒரே மூச்சில் படிக்க முடிகிறது என்பதுதான். ஆனால் ஆண்டு வரிசைக் கிரமத்தில் சிறுகதைகள் நிரைப்படுத்தாமை என்னைப் பொறுத்த வரையில் குறையாகப்பட்டது. இருந்தபோதும் நான்கு தசாப்த காலகட்டத்தின் வாழ்க்கைக் கோலங்களை தரிசிக்க முடிவது மகிழ்ச்சியே.
இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் தான் தெணியான். கடந்த நான்கு தசாப்தங்களாக ஈழத்து படைப்புலகில் தனது ஆழமான தடங்களைப் பதித்த அவர் மேலும் படைப்புலகில் முன்நகர்ந்த படியே இருக்கிறார். இப்பொழுதும் தன் அவதானிப்பைக் கூர்மைப்படுத்தி, மொழியாற்றலை செழுமைப்படுத்தி, படைப்பாற்றல் உத்திகளை நவீனப்படுத்திக் கொண்டிருப்பதால்தான் அவரது எழுத்து முதுமை தட்டாது இளமையுடன் பவனிவருகிறது. இதனால் வாசகர்களின் உள்ளுணர்வுடன் பேச முடிகிறது.
இவற்றிற்கெல்லாம் மூல காரணம் அவருடன் உள்ளுறையும் மனிதநேயமும், முற்போக்குக் கருத்துகளும்தான் என்றே நம்புகிறேன்.
தொடர்புகள்:-
தெணியான்(கந்தையா நடேசு)
கலையருவி
கருணவாய் வடக்கு
வல்வெட்டித்துறை
விலை:- ரூபா 250.00
எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- மல்லிகை ஜீலை 2008..



2 comments:
அழகான விரிவான பதிவுக்கு நன்றி டொக்டர், இவரின் பொற்சிறையில் வாழும் புனிதர்கள் படைப்பும் காலத்தால் மறக்க முடியாதது.
உண்மைதான் அது ஒரு மிக நல்ல நாவல். அதன் வெளியீட்டு விழாவிலும் அப்பொழுது கலந்துகொண்டடதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்