Monday, January 30, 2012

யாழ் மருத்துவர்களின் அரும்பணியில் காசநோய் தடுப்பு பற்றிய நூல்

காசநோய் உலகெங்கும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.
கொழும்பு மாவட்டதிலிருந்து மாத்திரம் வருடாவருடம் 2000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருடாவருடம் 10,000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலும் குறைவில்லை.



போரில் குண்டுத்தாக்குதல்கள் ஏராளமாக நடந்த காரணத்தால் அந்த விசக் காற்றுகளினால் பல விதமான சுவாச நோய்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக வன்னி மக்கள் மோசமாக ஆட்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

இந் நிலையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் யாழ் சுகாதாரப் பகுதியின் காசநோய் ஒழிப்புப் பிரிவு மருத்துவ அதிகாரியான டொக்டர் சி.யமுனானந்தா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் எழுதிய நூல்தான் மேற் கூறிய ‘காசநோய் சமூக அணுகுதல்’ என்பதாகும். மிகவும் எளிமையான தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் நூலை எழுதியுள்ளார்

உள்ளடக்கம் பின்வருமாறு
  1. காசநோயும் சுவாச ஆரோக்கியமும்
  2. நுரையீரலில் ஏற்படும் காசநோய்
  3. நுரையீரல் அல்லாத பகுதிகளில் ஏற்படும் காசநோய்
  4. சிறுவர்களில் காசநோய்
  5. பெண்களில் காசநோய்
  6. காசநோயும் சலரோகமும்
  7. காசநோயும் புகைத்தலும்
  8. காசநோயும்மதுபானமும்
  9. காசநோயும்போசாக்கும்
  10. காசநோயும்எயிட்ஸ் நோயும்
  11. முதியவர்களில் காசநோய்
  12. மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்
  13. காசநோயை ஆய்வுகூடங்களில் கண்டறிதல்
  14. ஆய்வுகூடங்களில்தரம் பேணுதலும் கட்டுப்பாடும்
  15. காசநோயிற்கான சிகிச்சை
  16. தொய்வுநோயினை காசநோயிலிருந்து வேறுபடுத்தி அறிதல்
  17. காசநோய் பற்றிய விழிப்பணர்வு
காசநோய் பற்றிய விழிப்புணர்வுப் பாடல்கள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளமை சமூகத்திற்குள் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்ல வழிவகுக்கிறது.
காசநோய் என்றால். அதன் அறிகுறிகள் என்ன? என்பதை சுலபமாக விளங்கக் கூடிய படங்களாகக் கொடுத்துள்ளார்.


இவை தவிர வேறு சில அறிகுறிகளும் அடங்கும். அவை பற்றிய கருத்துப்படங்களைக் கீழே காணலாம்.


இதைவிடத் தெளிவாக காசநோயின் முக்கிய அறிகுறிகள் பற்றி விளக்க முடியாது. எவருக்கும் புரியும் வண்ணம் கருத்துப் படங்கள் அமைந்துள்ளன.



இந்த நூல் ஏற்கனவே இரண்டு பதிப்புகள் வந்து மக்களிடையே பேராதரவைப் பெற்றுள்ளது.

மக்களிடையே சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதில் யாழ் மருத்துவர்கள் என்றுமே முன்னணியில் நிற்கிறார்கள்.

போரின் கொடும் தாக்கம் நிறைந்த நாட்களில் டொக்டர்.பொன்னம்பலம், டொக்டர்.திருமதி.நாகேந்திரா, டொக்டர்.சிவகுமார், டொக்டர்.தயா சோமசுந்தரம், டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவயோகன், டொக்டர்.குகதாசன், டொக்டர்.ரவிராஜ் போன்ற பலரும் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவர்களுக்கு எமது சமூகம் என்றும் மதிப்புக் கொடுத்து வந்திருப்பதையும் அறிவோம்.

இன்று கொழும்பில் பணியாற்றும் நூற்றுக் கணக்கான மருத்துவ நிபுணர்களிடையே மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து பரிவோடு பணியாற்றுபவர்களாக டொக்டர்.ஆனந்தராஜா, டொக்டர்.கணேசரட்ணம், டொக்டர்.சிவகுமார்,  போன்ற ஒரு சிலரையே குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் முன்பு யாழ் மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் அவ்வாறான பல மருத்துவர்கள் யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவர்களது பெயர் விபரங்களை நான் அறியேன். புற்று நோய், காசநோய், பொது மருத்துவம், மனநலம், சத்திர சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மகப்பேறு போன்ற பல துறைகளிலும் அளப்பரிய பணியாற்றுகிறார்கள். குறைந்த வசதிகளுடன் நிறைான பணியாற்றுகிறார்கள்.

தங்கள் வழமையான பணிகளுக்க மேலாக அவர்கள் காசநோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நோய்கள் பற்றிய நூல்களையும். சிடி க்களையும் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.

அவர்களது பணிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்க வேண்டியது எமது கடமையாகும். பாராட்டிற்குரிய பெருமனிதர்களாக இன்றும் யாழ் மருத்துவர்களே விளங்குகிறார்கள்.

ஞாயிறு தினக்குரலின் நூலகம் பகுதியில் 29.11.2012 ல் வெளியான எனதுகட்டுரை.

Post Comment

Sunday, January 15, 2012

தளிர்களின் சுமைகள் கவிதை நூல் வெளியீடு

திருமதி.சுமதி குகதாசன் அவர்களின்  'தளிர்களின் சுமைகள்' கவிதை நூல்எதிர்வரும் ஞாயிறு வெளியிடப்படுகிறது.


இளைப்பாறிய ஆசிரியரான அவரது முதலாவது நூல் இது. இவர் வடபுல இடதுசாரி முன்னோடியான தோழர் கார்த்திகேசன் அவர்களது புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரும், இடதுசாரி அரசியல்வாசியுமான கார்த்திகேசன் மாஸ்டர் ஒரு கவிஞரும் என்பதும் நினைவு கூரவேண்டியதாகும்.


கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் (7, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை) எதிர்வரும் ஞாயிறு(21.01.2012) மாலை 5 மணிக்கு வெளியீட்டு விழா ஆரம்பமாகிறது.

திரு.க.சிவபுத்திரன் (ஆசிரியர்) தலைமையில் நடைபெறும் விழா நடைபெறும்.

நூல் வெளியீட்டுரையை திரு.சிவா சுப்பிரமணியம்  (முன்னாள் தினகரன் ஆசிரியர்) ஆற்றுவார்.


கருத்துரைகள்
  • திரு.வீ.தனபாலசிங்கம் தினக்குரல் பிரதம ஆசிரியர், 
  • நெடுந்தீவு செ.மகேஸ் (இளைப்பாறிய ஆசிரியரும் கவிஞரும்),
  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன் 
ஆகியோர் ஆற்றுவார்கள்.
நூலாசிரியை திருமதி.சுமதி குகதாசன் ஏற்புரையை நிகழ்த்துவார்.


இந் நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் செய்யப்படுகி்னறன.

0.0.0.0.0.0

Post Comment

Thursday, January 5, 2012

யாருடைய புதுவருட வாழ்த்து உங்களுக்கு இதமாக இருந்தது?

புது வருட ஆரம்பக் கொண்டாட்டங்களும், குதூகலங்களும்
வெடியோசைகள் மெளனித்தித்தது போல போல அடங்கிவிட்டன.
திங்கள், செவ்வாய் என வேலை நாட்கள் தொடங்கிவிட்டதால்
எல்லோரையும் பிஸியாக்கிவிட்டிருக்கும்.

இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைத்த புதுவருட வாழ்த்துக்களை ஒருமுறை மனத்தில் நினைவூட்டிப் பார்க்கலாமே?

யாருடைய புதுவருட வாழ்த்து உங்கள் மனதிற்கு இதமாக இருந்தது?

அதிகாலை கண்விழிக்க முன்னரே காதருகே Happy New Year Darling கிசுகிசுப்புடன் புது வருடம் பிறந்திருக்குமே! மற்ற வேலைகளை எல்லாம் மறந்து வாழ்க்கைத் துணையைக் கணகணப்புடன் கட்டியணைக்க வைத்திருக்குமே. அந்த வாய்மொழி வாழ்த்து பிடித்ததா?


கன்னத்தில் முத்தமிட்டு "Happy New Year Dad" என உங்கள் செல்லக் குட்டி வாழ்த்தியிருக்குமே! இதைவிட வேறென்ன வேண்டும் என மனத்தை நெகிழ வைத்திருக்குமே.

டெலிபோன் கிணுகிணுக்க எரிச்சலுடன் தூக்கம் கலைந்து நேரத்தைப் பார்த்தால்  அதிகாலை 5 மணி. இந்த நேரத்தில் யார் என ரிசீவரைத் தூக்குகிறீர்கள். 

"எல்லா செளபாக்கியங்களும் கிட்டி, இந்தப் புதுவருடத்திலும் இனி வரும் காலங்களிலும் நீ நல்லா வழ வேணும்.". காலையில் கோயிலுக்கும் போகும் அவசரத்திலும் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன அம்மாவின் வாழ்த்து உங்களை மகிழச்சியில் ஆழ்த்தியதா?

கிக்கீ கிக்கீ என குருவியின் அழைப்புப்போல விடாது இசையாக ஒலித்துக் கொண்டே நண்பர்களும் உறவுகளும் அனுப்பிய வாழ்த்துக்களால் நிரம்பி வழியும் SMS செய்திகள் பிடித்திருந்தனவா?

கணனியைத் திறந்தால் Facebook கிலும், Twitter, Google +, e mail கிலும் வந்திருக்கும் வாழ்த்துக்களும் செய்திகளும் உங்களுக்குப் பிடித்திருக்கும்.

இப்படிப் பல வாழ்த்துகள் கிட்டியிருந்தாலும் அதில் ஏதாவது ஒன்று உங்கள் மனதுக்கு நெருக்கமானதாக மகிழ்ச்சியில் ஆழத்துவதாக அமைந்திருக்கும். அது யாருடையது?

இதே போல எனக்கும் பல வாழ்த்துகள் கிடைத்திருந்தன.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், இலக்கிய வட்டத்தினர், ஊடகத் துறை நட்புகள் எனப் பல. பலவிதமாக, பல வடிவங்களில்..

பல நோயாளிகளிடமிருந்து கூட..



அதில் இவரது வாழ்த்து மடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவர் ஒரு மிகவும் வயது முதிர்ந்தவர். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சென்ற வருட கிருஷ்மஸ்க்கு அடுத்த நாள்தான் தனது 87வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருந்தார்.

இந்த வயதிலும் தானே கடைக்குப் போய் இந்த வாழ்த்து மடலை எனக்கு வாங்கி அனுப்பியிருக்கிறார். இவர் தானே சென்று வாங்கிய விடயம் நேற்று அவரது மகள் தனது மகனை சிகிச்சைக்காகக்  கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது.

"உங்கள் அப்பாவிற்கு எனது வாழ்த்தையும் அவரது வாழ்த்து மடலுக்கு நன்றியையும் தெரிவியுங்கள்" என்றேன்.

"தானாகவே போய் வாங்கிப் போட்டிருக்கிறார் போலை. அவர் அனுப்பியது எங்களுக்குத் தெரியாது. அப்படி ஒரு அன்பு அவருக்கு உங்கள் மேல்" என்றார்.

எனக்குப் புல்லெரித்ததது.

பணத்தினால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற மமதையுடைய காலத்தில் தனியார் மருத்துவனான என்னை நினைத்து புது வருட வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அதில் தனது நடுங்கும் கைகளால் வாழ்த்து எழுத எவ்வளவு சிரமமப்பட்டிருப்பார்.

வாழ்த்து மடலில் அவரது பெயரை மட்டும் மறைத்திருக்கிறேன்.

அவ்வளவு ஆழ்ந்த அன்பு அவருக்கு இருந்திருக்கிறது. சுமார் 32 வருடங்களாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவானாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருந்தது.

இப்படி எத்தனை மகிழ்ச்சிகள் குடும்ப மருத்துவனாக இருப்பதில்.

உங்கள் அனுபவங்கள் எப்படி?

0.0.0.0.0.0.0

Post Comment